Turtles Can Fly (2004)

அமெரிக்க - ஈராக் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலம். ஈராக் - துருக்கி எல்லைப்பகுதி முகாமில் இருக்கும் குர்திஸ் அகதிகளை சுற்றி நகர்கிறது Turtles Can Fly. அப்பகுதி சிறுவர்களையே பிரதானமாக கொண்டு, அவர்களின் பிழைப்பு, போர் அவர்களிடத்தில் ஏற்படுத்திவிட்டுள்ள உளவியல் சிக்கல்கள் போன்றவற்றை பிரச்சாரத் தொனி இன்றி பதிவு செய்துள்ளது இத்திரைப்படம். 

கை, கால்களை இழந்தாலும் பரவாயில்லை என கண்ணிவெடிகளை எடுத்து விற்பனை செய்யும் சிறுவர்கள், படிப்பை விட ஆயுதமே அவசியமானது என வாதிட்டு ஆசிரியரை ஒத்துக்கொள்ளவைக்கும் சிறுவர்கள், உளவியல் தாக்கங்களுடன் அவதிப்படும் சிறுவர்கள் என போரில் சிக்குண்ட சிறுவர்களின் உலகம் எவ்வளவு கொடுமையாக இருக்கும் என்பதை உணரவைத்திருக்கிறது.

குர்திஸ் அகதிகள் அமெரிக்காவின் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். அமெரிக்க இராணுவத்தின் வரவு தமக்கு ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் எனவும் சதாமின் அடக்குமுறையில் இருந்து விடுதலை கிடைக்கும் எனவும் நம்புகிறார்கள். சாட்டிலைட்டும் அப்படியே நம்புகிறான். தன் மக்களுக்கு விடியலை தரப்போகிறவர்களின் மொழியை பேசுவதிலும், அமெரிக்க ஜனாதிபதியை மிஸ்டர். ஜோர்ஜ் புஸ் என்று அழைப்பதிலும் பெருமை கொள்கிறான். ஆனால் அமெரிக்கா சதாமை விழுத்திவிட்டு அவனது ஊருக்குள்ளும் நுழையும் போது அவனால் சந்தோசப்படமுடியவில்லை. இராணுவத்தை பார்க்க விருப்பமின்றி திரும்பிக்கொள்கிறான். இனி நகரத்துக்குள் போய் வேறு வேலை செய்யப்போகிறோம் என்று சொல்லும் சக சிறுவனின் முகத்தில்கூட விடுதலை கிடைத்த சந்தோசத்துக்கு பதில் குழப்பமே எஞ்சியிருக்கிறது. ஈராக்கும் சரி, அமெரிக்காவும் சரி... ஆளும்வர்க்கம் எப்போதும் ஒன்றாகவே இருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்துவிட்டார்களோ என்னவோ.

இந்த படத்தில் ரொம்பவே கலங்க வைத்தது அக்ரின் என்ற சிறுமியின் கதை. அவளது பெற்றோரை கொன்ற ராணுவம் அவள்மீது மேற்கொண்ட வன்புணர்வின் மூலம் பிறந்த குழந்தையை வெறுப்போடு பார்த்துவருகிறாள் . “என் பெற்றோரை கொன்றவர்களின் பிள்ளையை நான் எப்படி வளர்ப்பது” என்ற மனத்தாக்கமே அவளை துரத்திக்கொண்டிருக்கும். தான் இல்லாவிட்டால் பார்வை குறைபாடான தன் குழந்தை என்ன செய்யும் என்ற ஏக்கமே அவளது தற்கொலை முயற்சிகளையும் தடுத்துவிடுகிறது. குழந்தையை விட்டு விலகவும் முடியவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை என்ற இரு நிலைகளுக்குள் சிக்கிக்கொள்ளும் அந்த சிறுமியின் தவிப்பு படம் நெடுக நம்மையும் பற்றிக்கொள்கிறது. நம்மை உலுக்கும் அவளது முடிவு வரை அந்த தவிப்பு தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
Categories:
Similar Videos

0 comments: