ஐந்து திரைப்படங்கள் - இந்த வார பட்டியல் !

நீண்ட நாளைக்கு அப்புறம் மறுபடி ப்ளொக்கை தூசி தட்டியாச்சு :) அப்புறம் இந்த பதிவு விமர்சனம் எல்லாம் கிடையாது. விமர்சனம் பண்ணுற அளவுக்கு நாம வளரல்ல என்பதால, நான் பார்த்த படங்களில் எனக்கு பிடிச்ச படங்களை பற்றிய சிறிய பதிவு ;) அப்பப்போ இந்த பதிவு தொடர்ந்து வந்திட்டே இருக்கும். இது கடந்த மாதம் பார்த்த படங்கள் !



Trick r Treat - சில பல மாதங்களுக்கு முன்னாடியே டவுன்லோட் பண்ணிட்டாலும், ஹார்ட் டிஸ்க்ல தேங்கி கிடந்திச்சு. அப்புறம் உமர் அண்ணன் பதிவை படிச்சிட்டு படத்தை பார்த்தேன்.

Halloween பண்டிகையை ஒட்டிய ஒரு அட்டகாசமான திகில் படம். ஷாம் என்ற ஒரு திகிலான பாத்திரத்தின்மூலம் ஒன்றிணைக்கப்படும் நான்கு வெவ்வேறு கதைகளின் தொகுப்புத்தான் இந்த Trick r Treat. ஒரு சீரியல் கில்லரின் கதை, Halloween பண்டிகைக்காக வீடுகளுக்கு Trick or Treat கேட்டு செல்லும் நான்கு சிறுவர்களின் கதை, இளம் பெண்களாக வேட்டைக்கு வந்திருக்கும் werewolf இன் கதை, Halloween ட்ரீட் கொடுக்காத க்ரீக் எனப்படும் ஒரு கிழவனின் கதை.. இந்த நான்கு கதைகளும் ஷாம் மூலம் பின்னப்பட்டு அட்டகாசமான ஒரு திகில் அனுபவத்தை கொடுக்கிறது. திகில் ரசிகர்கள் தவறவிடக்கூடாத படம்! 

இந்த திரைப்படம் பற்றிய உமர் அண்ணனின் விரிவான பதிவை படிக்க : Trick ‘r Treat கொலை கொலையாம் காரணமாம்!



Burning Bright - 2010 இல் வெளிவந்த திரைப்படம். கதை என்று பெரிதாக எதுவும் இல்லை. கெல்லி என்னும் இளம் பெண்ணையும், ஆட்டிச குறைபாடுடைய அவளது தம்பியையும் கொல்ல திட்டமிடும் அவர்களது மாற்றாந் தந்தை, வீட்டிலிருந்து அவர்கள் வெளியேறமுடியாதபடி பண்ணிவிட்டு வீட்டினுள் ஒரு புலியை கொண்டுவந்து விடுகிறார்.

அருகில் யாருமில்லாத ஒரு பண்ணைவீட்டில் தனித்திருக்கும் ஒரு இளம்பெண்ணும் சிறுவனும், அந்த வீட்டில் ஒரு பசித்த புலியுடன் போராடுவதுதான் படம். கதை இல்லாவிட்டாலும் பரபரப்பாக நகரும் திரைக்கதையால் படம் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. ஆஹா ஓஹோ, அட்டகாசம் என்று சொல்லமுடியாவிட்டாலும், பார்க்கக்கூடிய நல்ல படம்.

அக்சுவலி எனக்கு பயம் என்ற உணர்ச்சி மற்ற எல்லா உணர்ச்சிகளையும் விட கொஞ்சம் அதிகம். அதனாலதான் IMDB ல கம்மியா ரேட்டிங் கொடுத்திருந்தாலும் படம் எனக்கு பிடிச்சிருந்துதோ என்னமோ :P ஆனா பார்க்கக்கூடிய படம் என்றதுக்கு நான் உத்தரவாதம் !


Boys Don't Cry - வரைமுறைகளுக்குள் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ளாத காதல்தான் எவ்வளவு அழகானது !!! ... தன் காதலன் ஓர் ஆண் இல்லை, ஆண்போல தன்னை நினைத்துக்கொள்ளும் ’பிறப்பால்’ பெண் என தெரியவரும்போதும் “ நீ யாராக வேண்டுமானாலும் இருந்துகொள், ஆனால் நீதான் என் காதலன்” என்று ஒரு காதலி சொல்லும் தருணத்தில் காதல் தன் வரைமுறைகளை கட்டுடைத்து முழுமைபெறுகிறது. அது இரு உள்ளங்களை மட்டும் உணர்ந்துகொண்ட காதல் அல்ல. மனித உணர்வுகளையும் உணர்ந்துகொண்ட காதல்.

தன்னை ஆணாக கருதிக்கொண்டு ஆண்போலவே பாவனைசெய்யும் ரீனா என்னும் பெண்ணுக்கும் அவளை/அவனை ஆணாகவே ஏற்றுக்கொள்ளும் ஒரு பெண்ணுக்குமிடையிலான அழகான காதல்... ஒருபக்கம் அழகான காதல்,இன்னொரு பக்கம் தன் அடையாளங்களை மறைக்க போராடும் ரீனாவின் வலிமிகுந்த போராட்டம். படம் பார்த்து முடியும்போது மனதில் வலிகள் மட்டுமே எஞ்சிநிற்கிறது. Boys Don't Cry - சமூகம் அழகாக வர்ணம் தீட்டப்பட்ட ஒரு காட்டுமிராண்டிக்கூடம் என்பதை பொட்டில் அறைந்து சொல்லும் படம். கட்டாயம் பார்க்கவேண்டிய படம் !

My Sassy Girl - ரொம்ப நாளைக்கு அப்புறம் நான் பார்த்த ஒரு அழகான லவ் ஸ்டோரி. 2001 இல் வெளிவந்த கொரியன் திரைப்படம்.

ஒரு தயிர்சாதமான காலேஜ் பையனுக்கும், ஒரு அடாவடி பெண்ணுக்கும் இடையிலான கலாட்டவான லவ் ஸ்டோரி. தன் முதல் காதல் தோல்விக்கு பிறகு குடித்துவிட்டு தற்கொலைக்கு முயற்சிக்கும் ஹீரோயினை காப்பாற்றுகிறான் நம்ம பையன். காதல் அரும்புகிறது.  அவர்களுக்கு என்ன பிரச்சினை வந்தது, இணைந்தார்களா இல்லையா என்பதுதான் மீதி கதை.

படத்தின் ப்ளஸ், படம் முழுவதும் இழையோடியிருக்கும் அந்த மென்மையான காதல். அதுபோல ஹீரோயின். ஆரம்பத்தில் பண்ணும் கலாட்டாவில் ஆகட்டும், இறுதியில் நம்மை கலங்க வைப்பதிலாகட்டும் படம் முடிந்தும் அவளை மறக்கமுடியவில்லை. இருவரும் ஒரு வருடம் பிரிவது என்று முடிவு செய்து ஒருவருக்கொருவர் எழுதிய கடிதத்தை Time Capsule இல் புதைத்து வைப்பதும் ஒரு வருட முடிவில் அதை தேடி வருவதும் செம டச்சிங். நல்லதொரு Feel Good திரைப்படம்.  கொரியன் திரைப்படங்கள் மொக்கையாக ஹாலிவூட்டில் ரீமேக் செய்யப்படும் என்ற விதிக்கினங்க ரொம்ப மொக்கையாகவே ஹாலிவூட்டிலும் வெளிவந்திருந்தது. அண்மையில் தமிழிலும் ரிமேக் பண்ணப்பட்டதாக கேள்வி. அதை இன்னும் பார்க்கவில்லை :)

Chronicle - இது ஏற்கனவே ஒருதடவை பார்த்த படம்தான். பட்  அந்த வித்தியாசமான, செமையான கான்சஃப்ட் ரொம்ப பிடிச்சு போனதால மறுபடி பார்த்தேன்.

ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், பேட்மேன் அந்த மேன் இந்த மேன் என்று ஒருதொகை, நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் பாடுபடுற சூப்பர் ஹீரோக்களை பார்த்திருப்போம். அவங்ககிட்ட இருக்கிற சூப்பர் பவர் எல்லாம், சமூக பற்றோ, நாட்டுப்பற்றோ, உலகப்பற்றோ எந்த பற்றையும் பற்றி யோசிக்காத என்னைய மாதிரி பசங்களுக்கு கிடைச்சா என்ன பண்னுவோம்? இந்தமாதிரி ஒரு ஹாலிவூட்காரரு யோசித்ததன் விளைவுதான் Chronicle.

ஆண்ட்ரூ, ஸ்டீவ், மேட் என்கிற மூன்று காலேஜ் பையன்களுக்கு திடிரென சூப்பர் பவர் கிடைக்கிறது. அதை வைத்து அவர்கள் என்ன அதகளம் எல்லாம் பண்ணுகிறார்கள், என்ன பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் என்பதை ஒன்றரை மணித்தியாலங்களுக்குள் அட்டகாசமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். அட்டகாசமான படம். கண்டிப்பாக பார்க்கலாம் !

அஞ்சு படத்துக்கு மேல பஞ்சியா இருக்கிறதால எழுதல்ல. பட் மிகுதி அடுத்தவாரம் தொடரும் என்று சொல்லிகொண்டு இத்தோடு முடித்துக்கொள்கிறேன் :P
Categories:
Similar Videos

0 comments: