Animation Movies

Action Movies

Comedy Movies

Animation Movies

Action Movies

Featured Movies

Wild Tales (2014)

anthology வகை திரைப்படம் இது. ஆறு குறுங்கதைகள் அட்டகாசமான கதை சொல்லல் முறையினூடாக இணைக்கப்பட்டுள்ளன. ஆறுமே வேறு வேறு கதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு அனுபவத்தை கொடுக்கும் “சூப்பர்” ரக கதைகள். anthology திரைப்படங்களுக்கு இருக்கவேண்டிய அடிப்படை பண்பு, அதில் சொல்லப்படும் கதைகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு புள்ளியினூடாக ஒன்றிணைக்கப்பட்டிருக்கவேண்டும். Wild Tales இல் கதைகளை ஒன்றிணைப்பது அவற்றின் தீம்.

நம்மாளுங்க அடிக்கொரு தடவை சொல்லி சலிக்க வச்ச வசனம் “ஒவ்வொருத்தனுக்குள்ளயும் ஒரு மிருகம் தூங்கிட்டிருக்கு” என்றதுதான் இல்லையா wink emoticon அந்த மிருகம் எப்போ விழித்தெழும்? சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகள், சக மனிதர்கள் போன்ற காரணிகளால் ஏற்படுத்தப்படும் உளவியல் அழுத்தம் அதற்கான எல்லையை கடக்கும் சந்தர்ப்பங்களில், அந்த மிருகத்தனம் விழித்துக்கொள்கிறது. விளைவுகள் சம்மந்தப்பட்டவர்களின் கட்டுப்பாட்டை கடந்தவையாகவே இருக்கும். Wild Tales இல் சொல்லப்படும் கதைகளின் தீம் இதுதான். இக் கதைகளில் சொல்லப்படுபவர்கள் எல்லோருமே சாதாரண மனிதர்கள்தான். சூழ்நிலை அவர்களை தீவிர மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, பழிவாங்கும் மனநிலைக்குள் திணித்து அசாதாரணமானவர்கள் ஆக்கிவிடுகிறது. 

இதில எனக்கு ஸ்பெஷலா வீதி மோதல், வெடிங், பார்க்கிங் தண்டம் எபிஷோடுகள் அட்டகாசமா பிடிச்சுது. குறிப்பா அந்த வீதிச்சண்டை. பயந்த சுபாவமுள்ள ஒருத்தன் தனக்கு நேர்ந்த அவமானங்களால மெல்ல மெல்ல வெறிபிடிச்சவனா மாறுவதை காட்சிப்படுத்திய விதம் செம like emoticon அதுக்காக மற்றது எல்லாம் குறைவில்லை. எல்லாமே நல்லாத்தான் இருக்கு. கண்டிப்பா பாருங்க. சிறந்த வெளிநாட்டு திரைப்படமாக அக்கடமி அவார்டுக்கு நொமினேட் ஆன திரைப்படம் இது. 

Ghost Writer (2010)

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ஆடம் லாங்கின் சுயசரிதையை எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர் மர்மமாக இறந்துபோக, அவரது இடத்துக்கு நியமிக்கப்படுகிறான் ஒரு Ghost Writer. Ghost Writer என்றால், இன்னொருவரின் பெயரில் வெளியாகவிருக்கும் புத்தகங்களை பணத்துக்காக எழுதி கொடுப்பவர் (விரிவான விளக்கத்துக்கு கூகிளை நாடுக). அவன் வேலையை ஆரம்பிக்கும் தருணத்தில், ஆடம் லாங் பிரதமராக இருந்தபோது CIA வின் சட்டவிரோத ஆட்கடத்தல்களுக்கு துணை போனதற்காக இங்கிலாந்தில் எதிர்ப்பு கிளம்புகிறது. அதே நேரம் சர்வதேச நீதிமன்றம் ஆடம் லாங்கிற்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு உத்தரவிடுகிறது. ஏகப்பட்ட சிக்கல்களில் மாட்டிக்கொள்கிறார் முன்னாள் பிரதமர்.

மறுபுறம் முதன்முதலில் சுயசரிதையை எழுத ஆரம்பித்த எழுத்தாளரின் மரணம் தொடர்பான துப்புகள் தற்போதைய Ghost Writer இற்கு கிடைக்க.. அது பல முடிச்சுக்களை அவிழ்க்க.. படம் சூடு பிடிக்கிறது. 

அவசியம் பார்க்கவேண்டியதொரு பொலிடிகல் த்ரில்லர். படத்தின் முதல் நிமிடங்களில் ஆரம்பிக்கும் மர்மத்தை இறுதி நிமிடங்கள் வரை தொடர வைத்தது ப்ளஸ். வங்குரோத்து அரசியல்கள், சர்வதேச நீதிமன்றத்தின் இரட்டை முகம், CIA வின் சட்டவிரோத நடவடிக்கைகள் என சமகால அரசியல் நிகழ்வுகள் எல்லாவற்றையும் பாரபட்சமின்றி கிழித்து தொங்கப்போட்டிருக்கிறது படம். படத்தை இயக்கியிருப்பவர் The Pianist படத்தின் இயக்குனர் ரொமன் பொலான்ஸ்கி. The Ghost என்னும் நாவலே படமாக்கப்பட்டிருக்கிறது.

Religulous (2008)

கடவுள் நம்பிக்கை எங்களுக்கு எப்படி வந்தது? யார் சொல்லிக்கொடுத்து வந்தது? கடவுள் பற்றிய எங்கள் தேடல் எந்தளவில் இருக்கிறது ? சின்ன வயதில் அம்மா, அப்பா சொல்லிக்கொடுத்தது, சமூகம் சொல்லிக்கொடுத்தது. எந்தவித எதிர்க்கேள்வியும் இன்றி நாமும் அவற்றை பின்பற்றிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நாங்கள் கடவுளை பின்பற்றுவதில்லை என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா? அப்படி ஒரு பிரம்மையில், கடவுளை வைத்து நிறுவனமயமாக்கப்பட்ட மத அமைப்புக்களைத்தான் நாங்கள் பின்பற்றிக்கொண்டிருக்கிறோம். 

கடவுள் வேறு, மதம் வேறு என்பதுதான் உண்மை. எமக்கு மேற்பட்ட ஒரு சக்தி உண்டு என்ற மக்களின் நம்பிக்கையை மூலதனமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட வியாபார நிறுவனங்களே மதங்கள். இவை செய்வது படு கேவலமான, இழிவான ”பிஸ்னஸ்” இப்படிப்பட்ட மத வியாபாரிகளை நிற்கவைத்து துகிலுரிகிறது “Religulous” ஆவணப்படம்.

இந்த ஆவணப்படம் கிறிஸ்துவம், இஸ்லாம், யூதம் ஆகிய மத அமைப்புக்களை குறித்து பேசுகிறது. நல்லவேளை.. இந்து மதத்தையும் உள்ளடக்கியிருந்தால் பாகம் 2, 3, 4 என்று போயிருக்கும். பில் மஹெரின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தடுமாறுவதில் ஆரம்பித்து, உச்சக்கட்டமாக வத்திக்கானில் காவலர்களை விட்டு விரட்டும் அளவுக்கு போயிருக்கிறார்கள் இந்த மதவாதிகள். எல்லாவற்றையும் அசால்டாக எதிர்கொண்டு செம மூக்குடைப்பு கொடுத்திருக்கிரார் பில் மஹெர்.

கண்டிப்பாக பாருங்கள். எதையுமே குருட்டு நம்பிக்கையுடன் மட்டும் எதிர்கொள்ளுபவர் என்றால் தவிர்த்துவிடுங்கள். உங்கள் நம்பிக்கைகளை இந்த படம் காயப்படுத்தலாம். அல்லாமல் எதையும் நியாயபூர்வமாக அணுக விரும்பினால், நிஜத்தை எதிர்கொள்ளும் துணிவிருந்தால்.. கண்டிப்பாக பாருங்கள் !

The Crow

காகங்களுக்கும் மனிதர்களுக்கும் ஒரு தொடர்பு உண்டு. பூமியில் ஒருவன் இறக்கும்போது அவனது ஆத்மாவை பாதுகாப்பாக அடுத்த உலகத்துக்கு அழைத்து செல்வது இந்த காகங்கள்தான். இப்படி அழைத்து செல்லப்படும் ஆத்மாக்களில் ஒன்று இவ்வுலகில் முடிக்காத தன் எதோவொரு கடமையின்பொருட்டு துக்கத்தோடு இருந்தால் அவனை மீண்டும் பூமிக்கு அழைத்து வருகின்றன இந்த காகங்கள். இப்படி ஒரு ஐதீகத்தோடு ஆரம்பிக்கிறது கதை. 

ரொம்ப சிம்பிளான ரிவெஞ் ஸ்டோரி லைன். ஒரு கிட்டாரிஸ்டும் அவனது காதலியும் லோகல் கேங் ஒன்றினால் கொலை செய்யப்படுகிறார்கள். இது நடந்து ஒருவருடம் கழித்து கொன்றவர்களை பழிவாங்க புதைகுழியில் இருந்து மீண்டு வருகிறான் எரிக் எனப்படும் அந்த கிட்டாரிஸ்ட். அவனை வழிநடத்துகிறது ஒரு காகம். இப்படி ஒரு சிம்பிளான கதையை வைத்து அட்டகாசமான படம் ஒன்றை கொடுத்திருக்கிறார்கள்.

படத்தில மிகப்பெரிய ஹைலைட் என்னென்றா... அட்டகாசமான விசுவல்ஸ் like emoticon சும்மா பட்டைய கெளப்பும். படம் முழுவது நிறைந்திருக்கும் Dark atmosphere... அந்த அசாதாரண இருள் கொடுக்கும் திகில்... செம. இன்னொரு ப்ளஸ் ப்ராண்டன் லீயின் ஸ்கிரீன் ப்ரசென்ஸ். குற்றவாளிகளும் victims & போலீஸும் மட்டுமே நிறைந்திருக்கும் அந்த நகரம் சிலவேளைகளில் கோதம் சிட்டியை ஞாபகப்படுத்தலாம். ஒருவேளை காமிக்ஸில் இது பொதுப்பண்போ என்னமோ. எனக்கு தெரியல்ல.

இன்னுமொரு தகவல். இந்த எரிக் என்ற பாத்திரம் எனக்கு ஜோக்கரை நினைவூட்டியது. ஜோக்கர் வேற லெவல். ஒப்பிடவே முடியாது என்றாலும் ஏனோ என் மைண்ட்ல கிளிக் ஆச்சு. காரணம் கண்டிப்பா அந்த மேக்கப் ஆகத்தான் இருக்கனும். சந்தேகத்தோட இண்டர்நெட்டை நாடினா பல பேர் அப்பிடித்தான் யோசிச்சிருக்கிறாங்க. இன்னுமொரு அதிர்ச்சி.. இந்த பாத்திரத்தில நடிச்ச ப்ராண்டன் லீ (ப்ரூஸ் லீயோட மகன்) படம் நடிச்சுக்கொண்டிருக்கும்போதே ஒரு விபத்தில இறந்துபோயிட்டார். சாகும்போது 28 வயது. ஜோக்கர் (Heath Ledger) மாதிரியே.

Turtles Can Fly (2004)

அமெரிக்க - ஈராக் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலம். ஈராக் - துருக்கி எல்லைப்பகுதி முகாமில் இருக்கும் குர்திஸ் அகதிகளை சுற்றி நகர்கிறது Turtles Can Fly. அப்பகுதி சிறுவர்களையே பிரதானமாக கொண்டு, அவர்களின் பிழைப்பு, போர் அவர்களிடத்தில் ஏற்படுத்திவிட்டுள்ள உளவியல் சிக்கல்கள் போன்றவற்றை பிரச்சாரத் தொனி இன்றி பதிவு செய்துள்ளது இத்திரைப்படம். 

கை, கால்களை இழந்தாலும் பரவாயில்லை என கண்ணிவெடிகளை எடுத்து விற்பனை செய்யும் சிறுவர்கள், படிப்பை விட ஆயுதமே அவசியமானது என வாதிட்டு ஆசிரியரை ஒத்துக்கொள்ளவைக்கும் சிறுவர்கள், உளவியல் தாக்கங்களுடன் அவதிப்படும் சிறுவர்கள் என போரில் சிக்குண்ட சிறுவர்களின் உலகம் எவ்வளவு கொடுமையாக இருக்கும் என்பதை உணரவைத்திருக்கிறது.

குர்திஸ் அகதிகள் அமெரிக்காவின் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். அமெரிக்க இராணுவத்தின் வரவு தமக்கு ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் எனவும் சதாமின் அடக்குமுறையில் இருந்து விடுதலை கிடைக்கும் எனவும் நம்புகிறார்கள். சாட்டிலைட்டும் அப்படியே நம்புகிறான். தன் மக்களுக்கு விடியலை தரப்போகிறவர்களின் மொழியை பேசுவதிலும், அமெரிக்க ஜனாதிபதியை மிஸ்டர். ஜோர்ஜ் புஸ் என்று அழைப்பதிலும் பெருமை கொள்கிறான். ஆனால் அமெரிக்கா சதாமை விழுத்திவிட்டு அவனது ஊருக்குள்ளும் நுழையும் போது அவனால் சந்தோசப்படமுடியவில்லை. இராணுவத்தை பார்க்க விருப்பமின்றி திரும்பிக்கொள்கிறான். இனி நகரத்துக்குள் போய் வேறு வேலை செய்யப்போகிறோம் என்று சொல்லும் சக சிறுவனின் முகத்தில்கூட விடுதலை கிடைத்த சந்தோசத்துக்கு பதில் குழப்பமே எஞ்சியிருக்கிறது. ஈராக்கும் சரி, அமெரிக்காவும் சரி... ஆளும்வர்க்கம் எப்போதும் ஒன்றாகவே இருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்துவிட்டார்களோ என்னவோ.

இந்த படத்தில் ரொம்பவே கலங்க வைத்தது அக்ரின் என்ற சிறுமியின் கதை. அவளது பெற்றோரை கொன்ற ராணுவம் அவள்மீது மேற்கொண்ட வன்புணர்வின் மூலம் பிறந்த குழந்தையை வெறுப்போடு பார்த்துவருகிறாள் . “என் பெற்றோரை கொன்றவர்களின் பிள்ளையை நான் எப்படி வளர்ப்பது” என்ற மனத்தாக்கமே அவளை துரத்திக்கொண்டிருக்கும். தான் இல்லாவிட்டால் பார்வை குறைபாடான தன் குழந்தை என்ன செய்யும் என்ற ஏக்கமே அவளது தற்கொலை முயற்சிகளையும் தடுத்துவிடுகிறது. குழந்தையை விட்டு விலகவும் முடியவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை என்ற இரு நிலைகளுக்குள் சிக்கிக்கொள்ளும் அந்த சிறுமியின் தவிப்பு படம் நெடுக நம்மையும் பற்றிக்கொள்கிறது. நம்மை உலுக்கும் அவளது முடிவு வரை அந்த தவிப்பு தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

Take Shelter (2011)

ஒரு படம் நல்ல படமாவதற்கு மூலாதாரமே அதன் ஸ்கிரீன்ப்ளே தான் இல்லையா? இந்த நல்ல திரைக்கதை என்பது ஒன்றில் பக்காவாக நம்மை Entertain பண்ணவேண்டும். அல்லது எம்மையும் படத்தின் ஓர் பாத்திரமாக உள்ளீர்த்து அந்த கதைக்களத்துடனும், பாத்திரங்களுடனும் நடமாட விடவேண்டும். Take Shelter 
இதில் இரண்டாவது வகை.

ஒரு வகையான மனநோயின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் குடும்ப தலைவன் ஒருவன் எதிர்கொள்ளும் உணர்ச்சிகரமான போராட்டமே இத்திரைப்படம். அவனது போராட்டத்தை அப்படியே இம்மி பிசகாமல் நம்மையும் உணர வைத்ததுதான் படத்தின் ஹைலைட். இதற்கு திரைக்கதை ஒரு முக்கிய பங்கு என்பதோடு Michael Shannon இன் அட்டகாசமான நடிப்பும் ஒரு காரணம். தான் காண்பதெல்லாம் நிஜமா அல்லது தன் தாய்க்கு ஏற்பட்ட மனநோய் பாதிப்பு தனக்கும் ஏற்பட்டுவிட்டதா என தடுமாறுவதில் ஆரம்பித்து, அந்த நிலையிலும் தன் குடும்பத்தை பாதுகாக்க போராடுவது வரை மனுசன் அசத்துகிறார். 

படத்தின் இன்னொரு முக்கியமான விசயம் அதன் முடிவு. நிகழ்வை பார்வையாளனின் முடிவுக்கே விட்டுவிடும் மயக்கமான முடிவு. அதை புரிந்துகொள்வதில்தான் படத்தின் அனுபவம் தங்கியிருக்கிறது. 

கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம் இது. ஆனால் விறுவிறுப்பான திரைக்கதையை கொண்ட படமல்ல. வேகமான திரைக்கதையை விரும்புபவர்கள் இடைநடுவில் தூங்கிவிடவும் வாய்ப்புண்டு. நல்லதொரு சினிமா அனுபவத்தை பெற விரும்பினால் கண்டிப்பாக பாருங்கள். Shotgun Stories, Mut படங்களோட இயக்குனர் Jeff Nichols தான் இந்த படத்தையும் இயக்கியிருக்கிறார். அந்த படங்கள் பார்க்கல்ல என்றா தவறாம பார்த்திடுங்க. அட்டகாசமான படங்கள் !

Mad Max Fury Road 2015

பழைய மேட் மேக்ஸ் படங்களின் தீவிரிர ரசிகன் என்பதால் இந்த படத்தின் தெளிவான பிரிண்டுக்காக காத்திருந்தேன். இதெல்லாம் கண்டிப்பா தியேட்டர்ல பாத்திருக்கவேண்டிய படம்தான். ஆனா நம்மூர்ல எப்பவாச்சும் ஸ்பைடர்மேனோ, அவெஞ்சர்ஸோ ரிலீசானா அதை ஒரு மாசம் கழிச்சு போடுவாங்க. இந்த படமெல்லாம் சான்சே இல்ல. அதனால வேற வழியே இல்லாம டோரண்ட்

தண்ணீரை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் தலைவனாகி, தன்னை கடவுளாக நினைக்கும் இம்மார்ட்டன் ஜோ.. அவனை கடவுளாக கும்பிடும் வெறிபிடித்த Half Life அடியாள் கூட்டம் என மனிதாபிமானம் செத்துப்போன Post apocalypse காலம். இந்த கூட்டத்துக்கும், இவர்களிடத்தில் இருந்து தப்பி செல்ல நினைக்கும் சில பெண்களுக்கும் இடையில் நிகழும் துரத்தல்கள்தான் Mad Max Fury Road.

17 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த கதையை ஜோர்ஜ் மில்லர் எழுதிவிட்டார் என்று ராஜேஸ் குறிப்பிட்டிருந்தார். படம் பார்த்து முதல் சில நிமிடங்களிலேயே அதனை உணர்ந்துவிடமுடியும். அத்தனை பெர்ஃபெக்டான திரைக்கதை & டீட்டெயிலிங்
மனுசன் சும்மா இருக்காமல் படத்தை பட்டை தீட்டியதன் பலன்கள் ! இரண்டாவது ஹைலைட் படத்தின் எடிட்டிங். ப்பா.... சும்மா பட்டைய கெளப்பியிருக்காங்க Margaret Sixel. 120 நிமிடம் ஓடும் இந்த திரைப்படத்துக்காக எடிட்டரிடம் கொடுக்கப்பட்ட Footage இன் அளவு 480 மணிநேரரங்கள் என்பது அடிசனல் தகவல்

”வழக்கமான படம்தான்.. ஆனா பரவாயில்லை” என்ற ரேஞ்சில் சமாளித்துக்கொண்டு வந்த ஹாலிவூட் சினிமா பக்கத்தை கொஞ்சம் ரீஃப்ரெஷ் பண்ணுறமாதிரி வந்திருக்கு இந்த படம். தவறவிடாதிங்க. முக்கியமா பெண்ணியவாதிகள். Post apocalypse வகையறாவில் வந்த தனித்துவமானதொரு படம் என்றும் இதை சொல்லலாம்.

Escape From Alcatraz

புனைவுகளை பொறுத்தவரை “Prison escape" என்ற தலைப்பு அதி உச்சமான சுவாரசியத்தை தரவல்லது என்பது எனது தனிப்பட்ட ரசனைஅது புத்தகாமானாலும், திரைப்படமானாலும். சிறைகளுக்குள் நடக்கும் கொடுமைகள், அதிலிருந்து மெல்ல மெல்ல திட்டமிட்டு எஸ்கேப் ஆகுதல்.. எல்லாமே அட்டகாசமான த்ரில் அனுபவங்கள்.

புத்தகங்களுள் இலக்கிய உலகின் தலைசிறந்த விடுதலை காவியமாக கொண்டாடப்படும் “பட்டாம்பூச்சி” தவிர வேறு நூல்கள் இந்த தலைப்பில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் பரிந்துரைக்கவும் (தமிழில்). படங்கள் என்றால் உடனடியாக சொல்லக்கூடியவை இரண்டு. shawshank redemption மற்றையது escape from alcatraz.

escape from alcatraz - உள்ளே போனால் தப்பவே முடியாது என்று தீவிரமாக நம்பப்பட்ட சிறை ஒன்றில் இருந்து மூன்று கைதிகள் தப்பி சென்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட திரைப்படம் இது. கைதியான மொரிஸ் சிறை சுவரை தோண்ட ஆரம்பித்ததில் இருந்து நமக்குள்ளும் ஆரம்பிக்கும் பதட்டம் கடைசி நிமிடம்வரை விடுவதாக இல்லை. இறுதியில் அவர்கள் தப்பி போய்விட்டார்கள் என்று சிறைக்காவலர்கள் உறுதிப்படுத்திய பின்னரே நாமும் சற்று அமைதியடைவோம். அந்தளவுக்கு நம்மையும் உள்ளீர்த்துக்கொள்கிறது திரைக்கதை.
படம் பார்த்து முடியும்போது நாமளும் ஒருக்கா ஜெயிலுக்கு போய் பிரில்லியண்டா ப்ளான் பண்ணி எஸ்கேப் ஆகனும் என்ற ஆசை வந்தா நீங்களும் என் நண்பனே

Agora (2009)

மதம் ஏன் ஆபத்தானது என்பதை ஒரு சில வரிகளுக்குள் சொல்லிவிடமுடியாதில்லையா? அது காலப்போக்கில் தான் வளர்ச்சியடையும்போது தன்னை சூழ்ந்துள்ள மனிதகுல வளர்ச்சியைம் முழுங்கி ஏப்பம் விட்டவாறே வளர்கிறது. பெண் சுதந்திரம், அறிவுசார்ந்த வளர்ச்சிகள், தனிமனித சுதந்திரங்கள் எல்லாமே மதத்தின் முன்னால் அடிபட்டு போய்விடுகிறது.
 
இந்த செய்தியை அதிரவைக்கும் விதத்தில் கூறியிருக்கிறது Agora என்னும் இத்திரைப்படம். தத்துவஞானியும், கணித மேதையுமான ஹிப்போசியா என்ற பெண்ணை முதன்மையாக கொண்டு ரோம் நகரின் மதவெறியை கண்முன் கொண்டுவந்திருக்கிறது இப்படம்.

ரோமில் நிலவிவந்த பேகன் வழிபாட்டை மெல்ல ஆக்கிரமித்து வந்த கிறிஸ்தவம் விரைவாகவே ஏனைய மதங்களையும், அறிவுக்கூடங்களையும் இரும்பு கரம் கொண்டு ஆக்கிரமித்துக்கொண்டது. யூதர்கள் மீது பாரிய இனவழிப்பு
கட்டவிழ்த்துவிடப்பட்டது. அறிவோடும், சுதந்திரத்தோடும் இருந்த பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு கல்லால் அடித்து கொல்லப்பட்டார்கள். மதத்தின் பெயரால் இத்தனை அக்கிரமங்களையும் நிகழ்த்தியதோடல்லாமல் வரலாற்று பக்கங்களில் அவற்றை மறைத்தோ நியாயப்படுத்தியோ வந்திருக்கின்றன மத அமைப்புகள்.

படம் சொல்லமுடியாத ஒரு வேதனையை விதைத்து செல்கிறது. யூதர்கள் மீதான இனவழிப்பின்போதும், நூலகம் எரிக்கப்படும் போதும்..... இதெல்லாம் வரலாற்றின் உண்மை சம்பவங்கள் என்று தெரிந்துகொண்டு வேதனைப்படுவதை விட என்ன செய்துவிட முடியும். சில பல சம்பவங்களோடு படத்தில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்களும் நிஜமானவைதான்.

திரைப்பட ரசிகர்கள் தவறவிடாதீர்கள்.

The Devil’s Double (2011)

தமது உயிர்குறித்து எந்தநேரமும் ஆபத்தை ஏதிர்கொண்டிருக்கும் பிரபலங்கள் அல்லது இயக்க தலைவர்கள் தம்மை போலவே தோற்றம் கொண்ட டூப்களை வைத்திருப்பார்கள் என்பது நாம் கேள்விப்பட்ட செய்திதான். ஹிட்லர், சதாம் ஹுசைன், பின்லேடன் போன்றவர்கள் தமக்கு டூப்களை வைத்திருந்ததாக நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் தானே? 2009 மே மாதத்தில் இலங்கையிலும் இந்த டூப் பற்றிய வதந்திகள் அதிகமா உலாவியிருந்தன. சரி நமக்கெதுக்கு அதெல்லாம்..


The Devil’s Double என்ற இந்த திரைப்படம் சதாமின் மகனான உதய் ஹுசைனின் டூப் பற்றி பேசுகிறது. தோற்றத்தில் உதய் ஹுசைனை ஒத்திருக்கும் Latif Yahia வலுக்கட்டாயமாக உதய்யின் போலியாக நடிக்க வைக்கப்படுகிறான். சாதாரண படைவீரனாக இருந்த Latif Yahia உதய்யின் உலகத்துக்குள் மெல்ல அறிமுகமாகும் சமயத்தில், ஒரு வலுமிக்க சர்வாதிகாரியின் மகனது அதிகார உலகம் நமக்கு முன் விரிய ஆரம்பிக்கிறது.

அதிகாரம் என்பதையும் கடந்த சர்வாதிகாரம் எதையும் செய்துவிடமுடியும் என்ற உற்சாகத்தை மனிதர்களுக்கு கொடுத்துவிடுகிறது. யாரையும் எந்த இடத்திலும் கொல்ல முடிகிறது. எந்த பெண்ணையும் தூக்கி வந்து பலாத்காரத்துக்கு உட்படுத்திவிட முடிகிறது. பள்ளி செல்லும் சிறுமிகளைக்கூட. இதுதான் உதய்யின் உலகம். ஒரு சர்வாதிகாரியின் சைக்கோ மகன் உதய், அவனது செயல்களில் சைக்கோத்தனமும், அதிகார போதையும் அளவுக்கதிகமாகவே வெளிப்படும். உதாரணமாக, ஒரு பார்டியில் கலந்துகொண்டிருக்கும் விருந்தினர்களை நோக்கி “எல்லோரும் ஆடைகளை களைந்துவிட்டு நிர்வாணமாக நடனமாடுங்கள்” என்கிறான். மறுபேச்சின்றி எல்லோரும் அப்படியே செய்கிறார்கள். உயிர்பயம் !!

Latif ஐ அழைத்துவந்து உதய் போல சில உடலமைப்புகளை மாற்றுவதற்கான சிகிச்சைகளும், உதயின் மேனரிசங்களை பழகுவதற்கான பயிற்சியும் நடந்துகொண்டிருக்கும் . தான் அனுபவிக்கும் அத்தனை வசதிகளையும் latif க்கு கொடுக்கும் உதய் அவனோடு சேர்ந்தே குளிக்கிறான். அந்த சமயத்தில் latif இன் ஆணுறுப்பு சற்று பெரிதாக இருப்பதை கவனிக்கும் உதய் அதன் அளவை சிறுசாக்கும்படி சொல்வான். இதை யார் பார்க்கப்போகிறார்கள் என்பதற்கு “பக்தாத் பெண்கள் எல்லாருக்கும் அதை பற்றி தெரியும்” என்பான் உதய். அந்த ஒரு வசனமே அவனது சர்வாதிகாரம் பற்றி விளக்க போதுமானதாக இருக்கும்.

இவனது செயல்கள் பிடிக்காத டூப் Latif Yahia ஒரு கட்டத்தில் தன் காதலியோடு தப்பியோடி, உதய்யை பழிவாங்க சந்தர்ப்பம் தேடுகிறான்.

உண்மைச்சம்பவங்களை கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. Latif Yahia எழுதிய புத்தகத்திலிருக்கும் தகவல்களை இந்த திரைப்படத்தில் எடுத்துக்கொண்டிருக்கிறார்களாம். விறுவிறுப்பானதொரு பொலிடிகல் த்ரில்லர்.

Another Earth

சயன்ஸ் ஃபிக்சன் திரைப்படங்களில் பலவகை உண்டு. ஆனால் என்னளவில் அவற்றை இரண்டாக பிரித்திருக்கிறேன். ஒன்று விஞ்ஞானத்தை புனைவுகளாக மட்டும் கொண்டு பிரம்மாண்டமாக எடுக்கப்படும் திரைப்படங்கள். இரண்டாவது விஞ்ஞான புனைவுகளை ஒரு உபகதையாக வைத்துக்கொண்டு அந்த சந்தர்ப்பத்தில் மனிதர்களுக்குள் நிகழும் உளரீதியான மாற்றங்களை, அவர்களது போராட்டங்களை காட்சிப்படுத்தும் திரைப்படங்கள். இந்த இரண்டாவது வகைக்கு Children of Men, Perfect Sense, Coherence, Her திரைப்படங்களை உதாரணமாக சொல்லலாம்.

Another earth திரைப்படம் இரண்டாவது வகைக்குள் சேர்ந்துகொள்கிறது. பூமியின் பிரதியான மற்றுமொரு கோள் பூமியை நெருங்கி வருகிறது. அங்கும் இங்கு இருக்கும் மக்களின் பிரதிகளே வாழ்ந்துவருவதாகவும் தெரிகிறது. இந்த அசாத்திய செய்தியால் மொத்த உலகமும் பரபரப்பாகிறது. இந்த நிகழ்வு நடைபெறும் காலப்பகுதியில் ஒரு பேராசிரியரை விபத்துக்குள்ளாக்கிவிடுகிறாள் இளம் பெண்ணொருத்தி. அந்த விபத்தில் பேராசிரியரின் மனைவியும் குழந்தையும் இறந்துபோக பேராசிரியர் தனிமையிலும், அந்த இளம் பெண் குற்றவுணர்விலும் தவிக்கிறார்கள்.

தன் தவறுக்கு பிராயிச்சித்தமாக தன்னை யாரென வெளிக்காட்டிக்கொள்ளாமலே பேராசிரியருடன் பழக ஆரம்பிக்கிறாள். பழக்கம் காலப்போக்கில் காதலாகி.. ஒரு நேரத்தில் பேராசிரியருக்கு உண்மை தெரிந்துபோக இருவருக்குமிடையிலான உறவுநிலை போராட்டம் ஆரம்பிக்கிறது.

இங்கே விஞ்ஞான புனைவு என்பது ஒரு உபகதையாக/ பிரதான கதையை நகர்த்திச்செல்ல உதவும் ஓர் கருவியாக உபயோகிக்கப்பட்டுள்ளது. பிரதான கதை இருவருக்குமான உளப்போராட்டம்தான். அந்த போராட்டம் காட்சிப்படுத்தப்பட்ட விதம் அட்டகாசம்.

Nightcrawler 2014

பொலிஸுக்கு பயந்து ஓடிக்கொண்டிருந்த சிரிய சிறுமி உட்பட அகதிகள் சிலரை ஹங்கேரிய தொலைக்காட்சி கேமராமேன் ஒருவர் உதைந்து விழுத்திய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. இந்த சம்பவத்தை அடுத்து அவரை பணிநீக்கம் செய்திருக்கிறது தொலைக்காட்சி. அந்த செய்தியை உள்வாங்கிக்கொண்டு இந்த கதையை கவனியுங்கள்.

லூயஸ் என்னும் திருடன், தனது தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் ஊடகத்துறைக்கு வருகிறான். கொலை, கொள்ளை, விபத்துக்களை தர்மங்களுக்கு அப்பாற்பட்டு படம்பிடித்து செய்தி நிறுவனங்களுக்கு சுட சுட விற்பதே அவன் வேலை.

ஊடகங்களுக்கு Exclusive என்னும் பெயரிலான செய்திகளே வியாபார விஸ்தரிப்புக்கான முதலீடாக அமைகின்றன. ஊடகங்கள் என்பது ஒரு பெருமுதலாளியின் கீழ் இயங்கும் வியாபார நிறுவனங்கள் என்பதை புரிந்துகொள்ளும்போது மேற்கண்ட Exclusive செய்தியின் தேவையை புரிந்துகொள்ளலாம். ஆகவே, ஒரு செய்தியை Exclusive ஆக பெற்றுக்கொள்வதற்கு பணத்தை கொட்டி கொடுக்க தயாராக இருக்கின்றன இந்த முதலாளித்துவ ஊடகங்கள். செய்திகள் எப்படி வருகின்றன என்பதில் அவர்களுக்கு கவலை இல்லை. ஆனால் ரத்தம் தெறிக்க தெறிக்க நல்ல த்ரில்லான, பரபரப்பான செய்திகள் மட்டுமே தேவை.

இப்படியான வீடியோக்களை பதிவுசெய்து கொடுக்க நல்ல திறமையுள்ள (!?) தொழிலாளர்கள் பலத்த போட்டிகளுடன் களத்தில் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி விரைவிலேயே முன்னேறுகிறான் லூயஸ். அதற்கு அவன் செய்வதெல்லாம் மேற்கண்ட ஹங்கேரிய அம்மணி வகையறா கைங்கரியங்கள்தான். விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவனை இழுத்து நடுவீதியில் போட்டுவிட்டு வீடியோ பதிவுசெய்கிறான், கொலை நடக்கும்போது அமைதியாக அதை பதிவு செய்கிறான், தன் சக பணியாளனை திட்டமிட்டே கொலைசெய்து அவன் இறந்துகொண்டிருப்பதையும் பதிவுசெய்கிறான்.

இவர்களுடைய பிழை என்று சொல்வதைவிட இவர்களை போன்றவர்களுக்கு ஊடகங்கள் காட்டிவைத்திருக்கும் பெரும் பணம்தான் இந்த நிகழ்வுகளுக்கு காரணமாக முடியும். இதன் அடிப்படையில் ஹங்கேரிய கேமராமேனின் பணிநீக்க நாடகத்தை நன்றகவே புரிந்துகொள்ளலாம்.

Nightcrawler படத்தை அவசியம் பாருங்கள். ஊடகங்கள் திரைமறைவில் நடத்தும் அயோக்கியத்தனத்தையும், இனவெறியையும் தோலுரித்து காட்டியிருக்கிறது.

The Imitation Game (2014)

அலன் டூரிங் என்னும் அற்புத மனிதனின் கதைதான் இந்த Imitation Game. உங்களுக்கு அலன் டூரிங்கை தெரியுமா ?

இரண்டாம் உலக யுத்தத்தின்போது சங்கேத வார்த்தைகளை பரிமாறிக்கொள்ள ஜேர்மன் எனிக்மா என்னும் இயந்திரத்தை உபயோகிக்கிறது. இவ் இயந்திரம் நிமிடத்துக்கு நிமிடம் சங்கேதவார்த்தைகளை மாற்றி அனுப்பிக்கொண்டிருக்க அவற்றை உடைக்கமுடியாமல் தடுமாறுகின்றன பிரிட்டன் படைகள். விளைவு.. தொடர் தோல்வி !

அந்த நேரத்தில் பிரிட்டன் ராணுவத்தில் சேரும் அலன் டூரிங், எனிக்மா இயந்திரத்தின் சங்கேதங்களை சில நிமிடங்களில் உடைக்கும்படியான இயந்திரம் ஒன்றை உருவாக்குகிறார். ஜேர்மனின் சங்கேதங்கள் இலகுவில் உடைய போரில் வெல்கிறது பிரிட்டன். கணிப்பின்படி அலன் டூரிங்கின் கணினி இயந்திரத்தால், இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே போர் நிறுத்தப்படுகிறது. 14 மில்லியன் உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. இதற்கெல்லாம் காரணம்.. அலன் டூரிங் என்னும் அற்புத மனிதன். நவீன கணினியின் தந்தை !

அலன் டூரிங் எனக்கு பிடிச்ச ஒரு அற்புத மனிதன். benedict cumberbatch செம்மையா பிடிச்ச நடிகர். ரெண்டுபேரும் ஒன்றாகிற இடம்... அட்டகாசம்

படத்தில் அலன் டூரிங்கின் எனிக்மா இயந்திரத்துக்கு எதிரான போராட்டம் பற்றி மட்டும்தான் சொல்லப்படுகிறது என்பது மட்டும் எனக்கு ஒரு குறையாக தோன்றினாலும்... படம் அட்டகாசமே ! கண்டிப்பா பாருங்க.

A Gun and a Ring - 2013

வேறுபட்ட கதைமாந்தர்களையும் களங்களையும் ஒருங்கே கையாளுவதில், அவற்றுக்கிடையே ஒரு பிணைப்பை லாவகமாக ஏற்படுத்திவிடுவதில் தேர்ந்தவர் அல்கேந்திரோ இன்னாரிட்டு. இவரின் படங்கள் மனிதனின் உள்மன வன்முறை சார்ந்த போராட்டங்களையும், அதனூடான விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியலையும் மிக இயல்பாக பதிவுசெய்திருக்கும். மனிதனது அடிமனதில் பதிந்துபோயுள்ள வன்முறைகளை கொண்டு சமூகத்தின் விழுமியங்களை கேள்விக்குட்படுத்தும். 21 Grams, Babel, Amores Perros போன்ற திரைப்படங்களை அவசியம் பார்த்துவிடுங்கள்.

அப்படியே சந்தர்ப்பம் கிடைத்தால் லெனின் எம் சிவத்தின் “A Gun and ring" திரைப்படத்தையும் பார்த்துவிடுங்கள். ஏன் சொல்கிறேன் என்றால் இன்னாரிட்டுவின் அத்தனை தகமைகளை லெனின் சிவத்திலும் காணமுடியும். லெனின், பல்வேறு அவல பின்னணி கொண்ட மாந்தர்களை மையமாக கொண்டு சமூக கட்டமைப்பை கேள்விக்குட்படுத்துகிறார்.
ஆறு தனித்தனி கதைகளைகளாக, அதேவேளை ஒன்றுடன் ஒன்று பிணைந்து செல்லும் திரைக்கதை உத்தி அட்டகாசமாக கையாளப்பட்டுள்ளது.

சந்தர்ப்பம், சூழ்நிலைகள் வில்லனாக, அந்த நேரத்தில் இம்மனிதர்கள் தமது உணர்வுகளை அப்பட்டமாக வெளிப்படுத்தும் விதம், அதை திரையில் பதிவு செய்த விதம் எல்லாமே அட்டகாசம் like emoticon

இன்னொரு விசயம். இது ஒரு கலை சினிமா. உலக சினிமா. அதேநேரம் திரையரங்குகளில் திரையிட்டால் சந்தேகமின்றி நன்றாக வசூல் பண்ணக்கூடிய அத்தனை தகுதிகளையும் கொண்ட படம். என்னை பொறுத்தவரை சினிமா என்ற படைப்புருவாக்கத்துக்குள் இருக்கும் உலக சினிமா, கலை சினிமா, வர்த்தக சினிமா என்ற மொன்னைத்தனமான பாகுபாடுகளை உடைத்துப்போட்ட புதிய அத்தியாயமாக A Gun and Ring ஐ கொள்ளமுடியும் என்பேன்.

ஐந்து திரைப்படங்கள் - இந்த வார பட்டியல் !

நீண்ட நாளைக்கு அப்புறம் மறுபடி ப்ளொக்கை தூசி தட்டியாச்சு :) அப்புறம் இந்த பதிவு விமர்சனம் எல்லாம் கிடையாது. விமர்சனம் பண்ணுற அளவுக்கு நாம வளரல்ல என்பதால, நான் பார்த்த படங்களில் எனக்கு பிடிச்ச படங்களை பற்றிய சிறிய பதிவு ;) அப்பப்போ இந்த பதிவு தொடர்ந்து வந்திட்டே இருக்கும். இது கடந்த மாதம் பார்த்த படங்கள் !



Trick r Treat - சில பல மாதங்களுக்கு முன்னாடியே டவுன்லோட் பண்ணிட்டாலும், ஹார்ட் டிஸ்க்ல தேங்கி கிடந்திச்சு. அப்புறம் உமர் அண்ணன் பதிவை படிச்சிட்டு படத்தை பார்த்தேன்.

Halloween பண்டிகையை ஒட்டிய ஒரு அட்டகாசமான திகில் படம். ஷாம் என்ற ஒரு திகிலான பாத்திரத்தின்மூலம் ஒன்றிணைக்கப்படும் நான்கு வெவ்வேறு கதைகளின் தொகுப்புத்தான் இந்த Trick r Treat. ஒரு சீரியல் கில்லரின் கதை, Halloween பண்டிகைக்காக வீடுகளுக்கு Trick or Treat கேட்டு செல்லும் நான்கு சிறுவர்களின் கதை, இளம் பெண்களாக வேட்டைக்கு வந்திருக்கும் werewolf இன் கதை, Halloween ட்ரீட் கொடுக்காத க்ரீக் எனப்படும் ஒரு கிழவனின் கதை.. இந்த நான்கு கதைகளும் ஷாம் மூலம் பின்னப்பட்டு அட்டகாசமான ஒரு திகில் அனுபவத்தை கொடுக்கிறது. திகில் ரசிகர்கள் தவறவிடக்கூடாத படம்! 

இந்த திரைப்படம் பற்றிய உமர் அண்ணனின் விரிவான பதிவை படிக்க : Trick ‘r Treat கொலை கொலையாம் காரணமாம்!



Burning Bright - 2010 இல் வெளிவந்த திரைப்படம். கதை என்று பெரிதாக எதுவும் இல்லை. கெல்லி என்னும் இளம் பெண்ணையும், ஆட்டிச குறைபாடுடைய அவளது தம்பியையும் கொல்ல திட்டமிடும் அவர்களது மாற்றாந் தந்தை, வீட்டிலிருந்து அவர்கள் வெளியேறமுடியாதபடி பண்ணிவிட்டு வீட்டினுள் ஒரு புலியை கொண்டுவந்து விடுகிறார்.

அருகில் யாருமில்லாத ஒரு பண்ணைவீட்டில் தனித்திருக்கும் ஒரு இளம்பெண்ணும் சிறுவனும், அந்த வீட்டில் ஒரு பசித்த புலியுடன் போராடுவதுதான் படம். கதை இல்லாவிட்டாலும் பரபரப்பாக நகரும் திரைக்கதையால் படம் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. ஆஹா ஓஹோ, அட்டகாசம் என்று சொல்லமுடியாவிட்டாலும், பார்க்கக்கூடிய நல்ல படம்.

அக்சுவலி எனக்கு பயம் என்ற உணர்ச்சி மற்ற எல்லா உணர்ச்சிகளையும் விட கொஞ்சம் அதிகம். அதனாலதான் IMDB ல கம்மியா ரேட்டிங் கொடுத்திருந்தாலும் படம் எனக்கு பிடிச்சிருந்துதோ என்னமோ :P ஆனா பார்க்கக்கூடிய படம் என்றதுக்கு நான் உத்தரவாதம் !


Boys Don't Cry - வரைமுறைகளுக்குள் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ளாத காதல்தான் எவ்வளவு அழகானது !!! ... தன் காதலன் ஓர் ஆண் இல்லை, ஆண்போல தன்னை நினைத்துக்கொள்ளும் ’பிறப்பால்’ பெண் என தெரியவரும்போதும் “ நீ யாராக வேண்டுமானாலும் இருந்துகொள், ஆனால் நீதான் என் காதலன்” என்று ஒரு காதலி சொல்லும் தருணத்தில் காதல் தன் வரைமுறைகளை கட்டுடைத்து முழுமைபெறுகிறது. அது இரு உள்ளங்களை மட்டும் உணர்ந்துகொண்ட காதல் அல்ல. மனித உணர்வுகளையும் உணர்ந்துகொண்ட காதல்.

தன்னை ஆணாக கருதிக்கொண்டு ஆண்போலவே பாவனைசெய்யும் ரீனா என்னும் பெண்ணுக்கும் அவளை/அவனை ஆணாகவே ஏற்றுக்கொள்ளும் ஒரு பெண்ணுக்குமிடையிலான அழகான காதல்... ஒருபக்கம் அழகான காதல்,இன்னொரு பக்கம் தன் அடையாளங்களை மறைக்க போராடும் ரீனாவின் வலிமிகுந்த போராட்டம். படம் பார்த்து முடியும்போது மனதில் வலிகள் மட்டுமே எஞ்சிநிற்கிறது. Boys Don't Cry - சமூகம் அழகாக வர்ணம் தீட்டப்பட்ட ஒரு காட்டுமிராண்டிக்கூடம் என்பதை பொட்டில் அறைந்து சொல்லும் படம். கட்டாயம் பார்க்கவேண்டிய படம் !

My Sassy Girl - ரொம்ப நாளைக்கு அப்புறம் நான் பார்த்த ஒரு அழகான லவ் ஸ்டோரி. 2001 இல் வெளிவந்த கொரியன் திரைப்படம்.

ஒரு தயிர்சாதமான காலேஜ் பையனுக்கும், ஒரு அடாவடி பெண்ணுக்கும் இடையிலான கலாட்டவான லவ் ஸ்டோரி. தன் முதல் காதல் தோல்விக்கு பிறகு குடித்துவிட்டு தற்கொலைக்கு முயற்சிக்கும் ஹீரோயினை காப்பாற்றுகிறான் நம்ம பையன். காதல் அரும்புகிறது.  அவர்களுக்கு என்ன பிரச்சினை வந்தது, இணைந்தார்களா இல்லையா என்பதுதான் மீதி கதை.

படத்தின் ப்ளஸ், படம் முழுவதும் இழையோடியிருக்கும் அந்த மென்மையான காதல். அதுபோல ஹீரோயின். ஆரம்பத்தில் பண்ணும் கலாட்டாவில் ஆகட்டும், இறுதியில் நம்மை கலங்க வைப்பதிலாகட்டும் படம் முடிந்தும் அவளை மறக்கமுடியவில்லை. இருவரும் ஒரு வருடம் பிரிவது என்று முடிவு செய்து ஒருவருக்கொருவர் எழுதிய கடிதத்தை Time Capsule இல் புதைத்து வைப்பதும் ஒரு வருட முடிவில் அதை தேடி வருவதும் செம டச்சிங். நல்லதொரு Feel Good திரைப்படம்.  கொரியன் திரைப்படங்கள் மொக்கையாக ஹாலிவூட்டில் ரீமேக் செய்யப்படும் என்ற விதிக்கினங்க ரொம்ப மொக்கையாகவே ஹாலிவூட்டிலும் வெளிவந்திருந்தது. அண்மையில் தமிழிலும் ரிமேக் பண்ணப்பட்டதாக கேள்வி. அதை இன்னும் பார்க்கவில்லை :)

Chronicle - இது ஏற்கனவே ஒருதடவை பார்த்த படம்தான். பட்  அந்த வித்தியாசமான, செமையான கான்சஃப்ட் ரொம்ப பிடிச்சு போனதால மறுபடி பார்த்தேன்.

ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், பேட்மேன் அந்த மேன் இந்த மேன் என்று ஒருதொகை, நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் பாடுபடுற சூப்பர் ஹீரோக்களை பார்த்திருப்போம். அவங்ககிட்ட இருக்கிற சூப்பர் பவர் எல்லாம், சமூக பற்றோ, நாட்டுப்பற்றோ, உலகப்பற்றோ எந்த பற்றையும் பற்றி யோசிக்காத என்னைய மாதிரி பசங்களுக்கு கிடைச்சா என்ன பண்னுவோம்? இந்தமாதிரி ஒரு ஹாலிவூட்காரரு யோசித்ததன் விளைவுதான் Chronicle.

ஆண்ட்ரூ, ஸ்டீவ், மேட் என்கிற மூன்று காலேஜ் பையன்களுக்கு திடிரென சூப்பர் பவர் கிடைக்கிறது. அதை வைத்து அவர்கள் என்ன அதகளம் எல்லாம் பண்ணுகிறார்கள், என்ன பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் என்பதை ஒன்றரை மணித்தியாலங்களுக்குள் அட்டகாசமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். அட்டகாசமான படம். கண்டிப்பாக பார்க்கலாம் !

அஞ்சு படத்துக்கு மேல பஞ்சியா இருக்கிறதால எழுதல்ல. பட் மிகுதி அடுத்தவாரம் தொடரும் என்று சொல்லிகொண்டு இத்தோடு முடித்துக்கொள்கிறேன் :P