Nightcrawler 2014

பொலிஸுக்கு பயந்து ஓடிக்கொண்டிருந்த சிரிய சிறுமி உட்பட அகதிகள் சிலரை ஹங்கேரிய தொலைக்காட்சி கேமராமேன் ஒருவர் உதைந்து விழுத்திய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. இந்த சம்பவத்தை அடுத்து அவரை பணிநீக்கம் செய்திருக்கிறது தொலைக்காட்சி. அந்த செய்தியை உள்வாங்கிக்கொண்டு இந்த கதையை கவனியுங்கள்.

லூயஸ் என்னும் திருடன், தனது தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் ஊடகத்துறைக்கு வருகிறான். கொலை, கொள்ளை, விபத்துக்களை தர்மங்களுக்கு அப்பாற்பட்டு படம்பிடித்து செய்தி நிறுவனங்களுக்கு சுட சுட விற்பதே அவன் வேலை.

ஊடகங்களுக்கு Exclusive என்னும் பெயரிலான செய்திகளே வியாபார விஸ்தரிப்புக்கான முதலீடாக அமைகின்றன. ஊடகங்கள் என்பது ஒரு பெருமுதலாளியின் கீழ் இயங்கும் வியாபார நிறுவனங்கள் என்பதை புரிந்துகொள்ளும்போது மேற்கண்ட Exclusive செய்தியின் தேவையை புரிந்துகொள்ளலாம். ஆகவே, ஒரு செய்தியை Exclusive ஆக பெற்றுக்கொள்வதற்கு பணத்தை கொட்டி கொடுக்க தயாராக இருக்கின்றன இந்த முதலாளித்துவ ஊடகங்கள். செய்திகள் எப்படி வருகின்றன என்பதில் அவர்களுக்கு கவலை இல்லை. ஆனால் ரத்தம் தெறிக்க தெறிக்க நல்ல த்ரில்லான, பரபரப்பான செய்திகள் மட்டுமே தேவை.

இப்படியான வீடியோக்களை பதிவுசெய்து கொடுக்க நல்ல திறமையுள்ள (!?) தொழிலாளர்கள் பலத்த போட்டிகளுடன் களத்தில் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி விரைவிலேயே முன்னேறுகிறான் லூயஸ். அதற்கு அவன் செய்வதெல்லாம் மேற்கண்ட ஹங்கேரிய அம்மணி வகையறா கைங்கரியங்கள்தான். விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவனை இழுத்து நடுவீதியில் போட்டுவிட்டு வீடியோ பதிவுசெய்கிறான், கொலை நடக்கும்போது அமைதியாக அதை பதிவு செய்கிறான், தன் சக பணியாளனை திட்டமிட்டே கொலைசெய்து அவன் இறந்துகொண்டிருப்பதையும் பதிவுசெய்கிறான்.

இவர்களுடைய பிழை என்று சொல்வதைவிட இவர்களை போன்றவர்களுக்கு ஊடகங்கள் காட்டிவைத்திருக்கும் பெரும் பணம்தான் இந்த நிகழ்வுகளுக்கு காரணமாக முடியும். இதன் அடிப்படையில் ஹங்கேரிய கேமராமேனின் பணிநீக்க நாடகத்தை நன்றகவே புரிந்துகொள்ளலாம்.

Nightcrawler படத்தை அவசியம் பாருங்கள். ஊடகங்கள் திரைமறைவில் நடத்தும் அயோக்கியத்தனத்தையும், இனவெறியையும் தோலுரித்து காட்டியிருக்கிறது.
Categories:
Similar Videos

0 comments: