Showing posts with label Movies. Show all posts
Showing posts with label Movies. Show all posts

Wild Tales (2014)

anthology வகை திரைப்படம் இது. ஆறு குறுங்கதைகள் அட்டகாசமான கதை சொல்லல் முறையினூடாக இணைக்கப்பட்டுள்ளன. ஆறுமே வேறு வேறு கதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு அனுபவத்தை கொடுக்கும் “சூப்பர்” ரக கதைகள். anthology திரைப்படங்களுக்கு இருக்கவேண்டிய அடிப்படை பண்பு, அதில் சொல்லப்படும் கதைகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு புள்ளியினூடாக ஒன்றிணைக்கப்பட்டிருக்கவேண்டும். Wild Tales இல் கதைகளை ஒன்றிணைப்பது அவற்றின் தீம்.

நம்மாளுங்க அடிக்கொரு தடவை சொல்லி சலிக்க வச்ச வசனம் “ஒவ்வொருத்தனுக்குள்ளயும் ஒரு மிருகம் தூங்கிட்டிருக்கு” என்றதுதான் இல்லையா wink emoticon அந்த மிருகம் எப்போ விழித்தெழும்? சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகள், சக மனிதர்கள் போன்ற காரணிகளால் ஏற்படுத்தப்படும் உளவியல் அழுத்தம் அதற்கான எல்லையை கடக்கும் சந்தர்ப்பங்களில், அந்த மிருகத்தனம் விழித்துக்கொள்கிறது. விளைவுகள் சம்மந்தப்பட்டவர்களின் கட்டுப்பாட்டை கடந்தவையாகவே இருக்கும். Wild Tales இல் சொல்லப்படும் கதைகளின் தீம் இதுதான். இக் கதைகளில் சொல்லப்படுபவர்கள் எல்லோருமே சாதாரண மனிதர்கள்தான். சூழ்நிலை அவர்களை தீவிர மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, பழிவாங்கும் மனநிலைக்குள் திணித்து அசாதாரணமானவர்கள் ஆக்கிவிடுகிறது. 

இதில எனக்கு ஸ்பெஷலா வீதி மோதல், வெடிங், பார்க்கிங் தண்டம் எபிஷோடுகள் அட்டகாசமா பிடிச்சுது. குறிப்பா அந்த வீதிச்சண்டை. பயந்த சுபாவமுள்ள ஒருத்தன் தனக்கு நேர்ந்த அவமானங்களால மெல்ல மெல்ல வெறிபிடிச்சவனா மாறுவதை காட்சிப்படுத்திய விதம் செம like emoticon அதுக்காக மற்றது எல்லாம் குறைவில்லை. எல்லாமே நல்லாத்தான் இருக்கு. கண்டிப்பா பாருங்க. சிறந்த வெளிநாட்டு திரைப்படமாக அக்கடமி அவார்டுக்கு நொமினேட் ஆன திரைப்படம் இது. 

Ghost Writer (2010)

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ஆடம் லாங்கின் சுயசரிதையை எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர் மர்மமாக இறந்துபோக, அவரது இடத்துக்கு நியமிக்கப்படுகிறான் ஒரு Ghost Writer. Ghost Writer என்றால், இன்னொருவரின் பெயரில் வெளியாகவிருக்கும் புத்தகங்களை பணத்துக்காக எழுதி கொடுப்பவர் (விரிவான விளக்கத்துக்கு கூகிளை நாடுக). அவன் வேலையை ஆரம்பிக்கும் தருணத்தில், ஆடம் லாங் பிரதமராக இருந்தபோது CIA வின் சட்டவிரோத ஆட்கடத்தல்களுக்கு துணை போனதற்காக இங்கிலாந்தில் எதிர்ப்பு கிளம்புகிறது. அதே நேரம் சர்வதேச நீதிமன்றம் ஆடம் லாங்கிற்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு உத்தரவிடுகிறது. ஏகப்பட்ட சிக்கல்களில் மாட்டிக்கொள்கிறார் முன்னாள் பிரதமர்.

மறுபுறம் முதன்முதலில் சுயசரிதையை எழுத ஆரம்பித்த எழுத்தாளரின் மரணம் தொடர்பான துப்புகள் தற்போதைய Ghost Writer இற்கு கிடைக்க.. அது பல முடிச்சுக்களை அவிழ்க்க.. படம் சூடு பிடிக்கிறது. 

அவசியம் பார்க்கவேண்டியதொரு பொலிடிகல் த்ரில்லர். படத்தின் முதல் நிமிடங்களில் ஆரம்பிக்கும் மர்மத்தை இறுதி நிமிடங்கள் வரை தொடர வைத்தது ப்ளஸ். வங்குரோத்து அரசியல்கள், சர்வதேச நீதிமன்றத்தின் இரட்டை முகம், CIA வின் சட்டவிரோத நடவடிக்கைகள் என சமகால அரசியல் நிகழ்வுகள் எல்லாவற்றையும் பாரபட்சமின்றி கிழித்து தொங்கப்போட்டிருக்கிறது படம். படத்தை இயக்கியிருப்பவர் The Pianist படத்தின் இயக்குனர் ரொமன் பொலான்ஸ்கி. The Ghost என்னும் நாவலே படமாக்கப்பட்டிருக்கிறது.

The Crow

காகங்களுக்கும் மனிதர்களுக்கும் ஒரு தொடர்பு உண்டு. பூமியில் ஒருவன் இறக்கும்போது அவனது ஆத்மாவை பாதுகாப்பாக அடுத்த உலகத்துக்கு அழைத்து செல்வது இந்த காகங்கள்தான். இப்படி அழைத்து செல்லப்படும் ஆத்மாக்களில் ஒன்று இவ்வுலகில் முடிக்காத தன் எதோவொரு கடமையின்பொருட்டு துக்கத்தோடு இருந்தால் அவனை மீண்டும் பூமிக்கு அழைத்து வருகின்றன இந்த காகங்கள். இப்படி ஒரு ஐதீகத்தோடு ஆரம்பிக்கிறது கதை. 

ரொம்ப சிம்பிளான ரிவெஞ் ஸ்டோரி லைன். ஒரு கிட்டாரிஸ்டும் அவனது காதலியும் லோகல் கேங் ஒன்றினால் கொலை செய்யப்படுகிறார்கள். இது நடந்து ஒருவருடம் கழித்து கொன்றவர்களை பழிவாங்க புதைகுழியில் இருந்து மீண்டு வருகிறான் எரிக் எனப்படும் அந்த கிட்டாரிஸ்ட். அவனை வழிநடத்துகிறது ஒரு காகம். இப்படி ஒரு சிம்பிளான கதையை வைத்து அட்டகாசமான படம் ஒன்றை கொடுத்திருக்கிறார்கள்.

படத்தில மிகப்பெரிய ஹைலைட் என்னென்றா... அட்டகாசமான விசுவல்ஸ் like emoticon சும்மா பட்டைய கெளப்பும். படம் முழுவது நிறைந்திருக்கும் Dark atmosphere... அந்த அசாதாரண இருள் கொடுக்கும் திகில்... செம. இன்னொரு ப்ளஸ் ப்ராண்டன் லீயின் ஸ்கிரீன் ப்ரசென்ஸ். குற்றவாளிகளும் victims & போலீஸும் மட்டுமே நிறைந்திருக்கும் அந்த நகரம் சிலவேளைகளில் கோதம் சிட்டியை ஞாபகப்படுத்தலாம். ஒருவேளை காமிக்ஸில் இது பொதுப்பண்போ என்னமோ. எனக்கு தெரியல்ல.

இன்னுமொரு தகவல். இந்த எரிக் என்ற பாத்திரம் எனக்கு ஜோக்கரை நினைவூட்டியது. ஜோக்கர் வேற லெவல். ஒப்பிடவே முடியாது என்றாலும் ஏனோ என் மைண்ட்ல கிளிக் ஆச்சு. காரணம் கண்டிப்பா அந்த மேக்கப் ஆகத்தான் இருக்கனும். சந்தேகத்தோட இண்டர்நெட்டை நாடினா பல பேர் அப்பிடித்தான் யோசிச்சிருக்கிறாங்க. இன்னுமொரு அதிர்ச்சி.. இந்த பாத்திரத்தில நடிச்ச ப்ராண்டன் லீ (ப்ரூஸ் லீயோட மகன்) படம் நடிச்சுக்கொண்டிருக்கும்போதே ஒரு விபத்தில இறந்துபோயிட்டார். சாகும்போது 28 வயது. ஜோக்கர் (Heath Ledger) மாதிரியே.

Turtles Can Fly (2004)

அமெரிக்க - ஈராக் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலம். ஈராக் - துருக்கி எல்லைப்பகுதி முகாமில் இருக்கும் குர்திஸ் அகதிகளை சுற்றி நகர்கிறது Turtles Can Fly. அப்பகுதி சிறுவர்களையே பிரதானமாக கொண்டு, அவர்களின் பிழைப்பு, போர் அவர்களிடத்தில் ஏற்படுத்திவிட்டுள்ள உளவியல் சிக்கல்கள் போன்றவற்றை பிரச்சாரத் தொனி இன்றி பதிவு செய்துள்ளது இத்திரைப்படம். 

கை, கால்களை இழந்தாலும் பரவாயில்லை என கண்ணிவெடிகளை எடுத்து விற்பனை செய்யும் சிறுவர்கள், படிப்பை விட ஆயுதமே அவசியமானது என வாதிட்டு ஆசிரியரை ஒத்துக்கொள்ளவைக்கும் சிறுவர்கள், உளவியல் தாக்கங்களுடன் அவதிப்படும் சிறுவர்கள் என போரில் சிக்குண்ட சிறுவர்களின் உலகம் எவ்வளவு கொடுமையாக இருக்கும் என்பதை உணரவைத்திருக்கிறது.

குர்திஸ் அகதிகள் அமெரிக்காவின் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். அமெரிக்க இராணுவத்தின் வரவு தமக்கு ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் எனவும் சதாமின் அடக்குமுறையில் இருந்து விடுதலை கிடைக்கும் எனவும் நம்புகிறார்கள். சாட்டிலைட்டும் அப்படியே நம்புகிறான். தன் மக்களுக்கு விடியலை தரப்போகிறவர்களின் மொழியை பேசுவதிலும், அமெரிக்க ஜனாதிபதியை மிஸ்டர். ஜோர்ஜ் புஸ் என்று அழைப்பதிலும் பெருமை கொள்கிறான். ஆனால் அமெரிக்கா சதாமை விழுத்திவிட்டு அவனது ஊருக்குள்ளும் நுழையும் போது அவனால் சந்தோசப்படமுடியவில்லை. இராணுவத்தை பார்க்க விருப்பமின்றி திரும்பிக்கொள்கிறான். இனி நகரத்துக்குள் போய் வேறு வேலை செய்யப்போகிறோம் என்று சொல்லும் சக சிறுவனின் முகத்தில்கூட விடுதலை கிடைத்த சந்தோசத்துக்கு பதில் குழப்பமே எஞ்சியிருக்கிறது. ஈராக்கும் சரி, அமெரிக்காவும் சரி... ஆளும்வர்க்கம் எப்போதும் ஒன்றாகவே இருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்துவிட்டார்களோ என்னவோ.

இந்த படத்தில் ரொம்பவே கலங்க வைத்தது அக்ரின் என்ற சிறுமியின் கதை. அவளது பெற்றோரை கொன்ற ராணுவம் அவள்மீது மேற்கொண்ட வன்புணர்வின் மூலம் பிறந்த குழந்தையை வெறுப்போடு பார்த்துவருகிறாள் . “என் பெற்றோரை கொன்றவர்களின் பிள்ளையை நான் எப்படி வளர்ப்பது” என்ற மனத்தாக்கமே அவளை துரத்திக்கொண்டிருக்கும். தான் இல்லாவிட்டால் பார்வை குறைபாடான தன் குழந்தை என்ன செய்யும் என்ற ஏக்கமே அவளது தற்கொலை முயற்சிகளையும் தடுத்துவிடுகிறது. குழந்தையை விட்டு விலகவும் முடியவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை என்ற இரு நிலைகளுக்குள் சிக்கிக்கொள்ளும் அந்த சிறுமியின் தவிப்பு படம் நெடுக நம்மையும் பற்றிக்கொள்கிறது. நம்மை உலுக்கும் அவளது முடிவு வரை அந்த தவிப்பு தொடர்ந்துகொண்டே இருக்கிறது.